அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ந்தாலும் அதன் பாதிப்பு இந்தியப் பொருளாதாரத்திற்கு அதிகமான பாதிப்பினை ஏற்படுத்தாது என்பதற்கான பல காரணங்கள் இருக்கின்றன.
இந்தியாவின் இறக்குமதியில் பெரும்பகுதி உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் வருகிறது. எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டுமே இந்தியா இருக்கவில்லை.
சீனாவைப் போல முற்றிலும் ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருக்கிற நாடு இந்திய அல்ல. இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களில் ஏறக்குறைய 65 சதவீதம் இந்தியாவிற்குள்ளேயே நுகரப்பட்டுவிடுகிறது.
சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களில் வெறும் இருபது சதவீதம் அல்லது அதற்குக் கீழான சதவீதத்தில் மட்டுமே சீனர்களினால் நுகரப்படுகிறது. அவர்களது பொருளாதாரம் முழுக்க, முழுக்க ஏற்றுமதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.
ஏற்றுமதி நின்றுபோனதால் இன்றைக்குச் சீனப் பொருளாதாரம் படுத்துவிட்டது. உள் நாட்டு நுகர்வை அதிகப்படுத்த சீன் அரசாங்கம் செய்த அத்தனை முயற்சிகளும் தோலிவியிலேயே முடிந்துவிட்டன.
எனவே கொள்வாரில்லாமல் உற்பத்தியான பொருட்கள் துறைமுகங்களிலும், தொழிற்சாலைகளிலும் தேங்கிக் கிடக்கின்றன.
சீனாவின் ஒற்றைக் குழந்தை திட்டத்தின் காரணமாக இன்றைக்கு சீன மக்கள்தொகை வேகமாகக் குறைந்துவருகிறது.
இருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வயதானவர்கள். தங்களின் பிள்ளைகளின் சம்பாத்தியத்தை நம்பி வாழ்கிறவர்கள் அதில் அதிகம். விலைவாசி தாறுமாறாக உயர்ந்துபோய், ஏற்றுமதி குறைந்திருப்பதன் காரணமாக வேலையிழந்த சீனர்கள் இன்றைக்குத் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தங்களது வாழ்நாள் சேமிப்பு முழுவதனையும் கொட்டி அவர்கள் வாங்கிய வீடுகள் மோசமான தரத்தின் காரணமாக இடிந்து விழுந்துகொண்டிருப்பதனைப் பார்த்துக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கும் மேலாக இயற்கைப் பேரிடர்கள் சீனாவை உண்டு, இல்லை என ஆக்கிக் கொண்டிருக்கின்றன.
இன்னொருபுறம் அமெரிக்கா எந்தவிதமான உற்பத்தியையும் செய்யாமல், சீனா போன்ற நாடுகளின் தலையில் மிளகாய் அறைத்துக் கொண்டிருக்கிறது.
வெறும் காகிதத்தை அச்சடித்துக் கொடுத்துவிட்டு அமெரிக்கா உண்மையான பொருட்களை சீனர்களிடமிருந்து வாங்கி சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.
எல்லா கடின உழைப்பும் சீனனுடையது. சுற்றுப்புறச் சூழலை அழித்து, இரவும் பகலுமாக கடின உழைப்பு செய்த சீனர்கள் இந்த நாற்பதாண்டுகளில் சம்பாதித்தது வெறும் மூன்று ட்ரில்லியன் டாலர்கள் மட்டும்தான்.
'கோவிட்' காலத்தில் அமெரிக்கா ஒரே வருடத்தில் நான்கு ட்ரில்லியனை அச்சடித்து அமெரிக்கர்களுக்கு இலவசமாக வினியோகித்ததைக் கண்டு சீனர்கள் அதிர்ந்தார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்தார்கள் என்றாலும் காலம் கடந்துவிட்டிருந்தது.
சீனர்கள் கதை முடிந்துவிட்டதைத் தெரிந்துகொண்ட அமெரிக்கா அதே வேலையை இந்தியர்கள் மீது செய்ய முயன்றது.
ஆனால் மோடி அதனைச் செய்யவிடவில்லை. சீனாவைப் போல ஒரு ஏற்றுமதிப் பொருளாதாரமாக இந்தியாவை மாற்றவே முடியாது எனத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் மோடி.
உனக்குத் தேவையென்றால் இந்தியாவில் தொழிற்சாலையைத் துவக்கி, "உனக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்துகொண்டு செல்" என்று சொல்லி "மேக் இன் இண்டியா" திட்டத்தைக் கொண்டுவந்தார்.
வேறு வழியில்லாமல் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் மெல்ல, மெல்ல தங்களது தொழிற்சாலைகளைத் துவங்க ஆரம்பித்திருக்கின்றன.
அவர்களுக்கு வேறு வழியே இல்லை. இந்தியாவில் தயாரிப்பதால் அவர்களுக்கு ஆகும் தயாரிப்புச் செலவு மிக, மிகக் குறைவானது.
உதாரணமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் "ஆப்பிள்" செல்ஃபோன்களுக்கு ஆகும் செலவு மிக, மிகக் குறைவு. அதை அமெரிக்காவில் பலமடங்கு அதிகமான விலைக்கு விற்று லாபத்தில் கொழிக்கிறது ஆப்பிள்.
இன்றைய அமெரிக்காவில் உலகுக்குத் தேவையான பொருட்கள் எதுவும் தயாரிக்கப்படுவதில்லை.
ஆயுதங்கள், விமானங்கள், பெட்ரோலிய எண்ணெய் போன்றவற்றைத் தவிர அமெரிக்கா ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
அமெரிக்கா எல்லா வளமும் கொண்ட நாடுதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதன் வளங்களைத் தோண்டியெடுத்து, உற்பத்திப் பொருட்களாகச் செய்ய ஆகும் செலவு மிக அதிகமானது என்பதால் அமெரிக்காவினால் உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களைத் தயாரிப்பது முடியாதகாரியம்.
எனவே அமெரிக்கா வலிமை குறைந்த உலக நாடுகளை மிரட்டித் தனக்குத் தேவையானவற்றைப் பிடுங்கிக் கொள்வதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
இந்தியாவையும் அப்படி மிரட்டி வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் என்கிற கணக்கில் மோடியும், ஜெய்சங்கரும், இந்திய ராணுவமும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார்கள்.
இனிவரும் காலங்களில் அமெரிக்க வாழ்க்கைமுறை மிகவும் கடினமான ஒன்றாக மாறப்போகிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.
மூன்றுபேர்கள் மட்டுமே வாழ்வதற்கு 2000 சதுர அடிகள் கொண்ட வீடும், மூன்று கார்களும், வீடு முழுக்க குளிரூட்டலும் எதற்காக என்பதனை உணராதவரையில் அமெரிக்கர்களை மாற்றுவது சிரமம்.
அமெரிக்க வாழ்க்கைமுறை முற்றிலும் சுற்றுச் சூழலுக்கும், அடிப்படை எளிமைக்கும் எதிரானது.
தினமும் சாதாரண அமெரிக்கர்கள் வீணடிக்கிற உணவுப் பொருட்களை வைத்து பத்து ஆப்பிரிக்க நாடுகள் பட்டினியில்லாமல் வாழலாம்.
இந்த வாழ்க்கைமுறை மாறியாகவேண்டிய காலம் அமெரிக்கர்களை வந்தடைந்திருக்கிறது.
ஏற்கனவே சொன்னபடி, இந்தியப் பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியினால் அதிகம் பாதிக்கப்படப் போவதில்லை.
அதேசமயம் பாதிப்பிலிருந்து இந்தியாவினால் தப்பவும் இயலாது என்றாலும் பிற நாடுகளை ஒப்பிடுகையில் குறைவாகவே இருக்கும்.
அப்படி ஒரு நிலை வந்தால் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து "ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா" ஏற்கனவே "ஸ்ட்ரெஸ் டெஸ்ட்டுகளை" நடத்தி முடித்துவிட்டது.
இதன் காரணமாக பாதிப்பின் அளவு எப்படி இருக்கும், அதனை எப்படி சமாளிப்பது போன்ற விஷங்களை இந்திய அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துவிட்டது.
அடிப்படையில் இந்தியப் பொருளாதாரம் மத அடிப்படையிலான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது.
பலமுறை சொன்னதைப் போல, இந்தியாவில் தொடர்ந்து பெரும் மதப் பண்டிகைகளும், திருவிழாக்களும் நடந்து கொண்டே இருப்பதனைப் பார்க்கலாம்.
இதுவே இந்தியப் பொருளாதாரத்தின் அச்சாணி. இந்தச் சக்கரம் நிற்காமல் சுழன்றுகொண்டே இருப்பதால்தான் இந்தியப் பொருளாதாரத்தை எவராலும் அசைக்க இயலவில்லை.
என்றைக்கு சனாதனம் அழிகிறதோ அன்றைக்கே இந்தியப் பொருளாதாரமும் அழியும். ஒரு "சித்திரைத் திருவிழா" மூலம் நடக்கும் பொருளாதாரச் செயல்பாடு எப்படியானது என்று யோசித்துப் பாருங்கள்.
இந்தியாவெங்கும் தினமும் இப்படியான ஏதோவொரு திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.
அதுவே நமது பொருளாதாரச் செயல்பாட்டை நிறுத்தாமல் சுழல வைத்துக்கொண்டிருக்கின்றன.
இடிந்துபோன, பராமரிக்கப்படாத, ஆறுகால பூசைகள் நடக்காத ஆலயங்கள் இருக்கும் தமிழக கிராமங்கள் வறுமையின்பிடியில் இருப்பதனை நீங்கள் பார்க்கலாம்.
அதற்கு நேரெதிராக சரியான முறையில் பராமரிக்கப்படும் ஆலயங்கள் இருக்கும் ஊர்களில் செல்வச் செழிப்பு இருந்துகொண்டே இருக்கும்.
மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம்... என பல ஊர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். குறைந்தபட்சம் அந்த ஊர்களில் எவனும் பட்டினியால் சாகமாட்டான்.
அதற்குக் காரணம், ஆலயம் சார்ந்த அந்த நகரங்களின் அடிப்படைப் பொருளாதாரச் சுழற்சி.
சுந்தர்ஜி
ஓம் நமசிவாய

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக